முள்முருங்கை கீரை

முள்முருங்கை மர வகையை சார்ந்தது. இந்த மரத்தை வேலி அமைப்பதற்காக வளர்க்கிறார்கள். முட்களை கொண்ட மென்மையான கட்டைகளை உடையது இந்த மரம். இதன் இலைகள் அகன்று பெரியதாக இருக்கும். ஒரு காம்பில் மூன்று இலைகள் காணப்படும். மேல் பகுதியில் ஒன்றும், இரு பக்கமும் இரண்டும் காணப்படும். இதன் பூக்கள் சிவப்பு நிறத்தில் பார்க்க அழகாக தோன்றும். இதற்கு கல்யாண முருங்கை என்ற பெயரும் உண்டு. இது துவர்ப்பும், கசப்பும் கலந்தது. பெண்களுக்கு மாதவிலக்கு நாட்களில் கடுமையான வலி ஏற்படும். இதற்கு முள்முருங்கை இலைசாற்றை 50 மி.லி எடுத்து, மாதவிலக்கு ஆரம்பிக்கும் ஐந்து நாட்களுக்கு முன்பிருந்து தினமும் பருகவேண்டும். வலி கட்டுப்படும். இந்த சாற்றில் 10 மி.லி. எடுத்து, வெந்நீர் கலந்து பருகினால் கபம், இருமல் நீங்கும்.
முள்முருங்கை பயன்கள் :
- ஒரு தேக்கரண்டி முள்முருங்கை இலைசாற்றை மோரில் கலந்து சாப்பிட்டால் சிறுநீர் கழிப்பதில் ஏற்படும் எரிச்சல் நீங்கும். முள் முருங்கை இலைசாற்றில் ஒரு தேக்கரண்டி தேன் கலந்து சாப்பிட்டால் வயிற்று பூச்சிகள் தொந்தரவு கட்டுப்படும். பத்து இலைகளை நறுக்கி, 50 கிராம் சிறிய வெங்காயத்தையும் சிறிதாக நறுக்கி, நல்லெண்ணெயில் வதக்கி பிரசவமான தாய்மார்கள் சாப்பிட்டால் தாய்பால் அதிகரிக்கும்.
- பெண்களுக்கு நாற்பது வயது நெருங்கும்போது இடுப்பு பகுதி பெருத்துப்போகும். அவர்கள் கல்யாண முருங்கை கீரையை உணவில் சேர்த்து சாப்பிட்டால் இடுப்பு கொழுப்பு நீங்கி இடை மெலியும். முள்முருங்கை பூ கர்ப்ப நோய்களுக்கு சிறந்த மருந்து. சுவாசகாசம் என்னும் மூச்சிரைப்பு நோய் அதிகரிக்கும்போது அரிசிக்கஞ்சியில், பூண்டுவை வேகவைத்து அதில் 30 மி.லி முள்முருங்கை சாறு கலந்து சாப்பிட்டால் கபம் வெளியேறி மூச்சிரைப்பு கட்டுப்படும். முள் முருங்கை இலையை ஆமணக்கு எண்ணெய் தடவி இளஞ்சூட்டில் வீக்கம் உள்ள இடத்தில் கட்டினால் வீக்கம் குறையும். மூட்டு வலிக்கு இலையை வதக்கி ஒத்தடம் கொடுக்கவேண்டும்.
- கல்யாண முருங்கைக் கீரையை, தொடர்ந்து சீரான இடைவேளைகளில் உணவில் சேர்த்துவந்தால் வயிற்றுவலி, வாந்தி, பித்த சுரம், வாய்ப்புண், உடல் சூடு ஆகியவை நீங்கி, உடல் வலுப்பெறும். இந்தக் கீரையை நன்றாக அரைத்து, கீரை தோசையாகவோ அடையாகவோ செய்து சாப்பிடலாம். ஒரு தேக்கரண்டி கல்யாண முருங்கை இலைச்சாற்றுடன், ஒரு டேபிள் ஸ்பூன் விளக்கெண்ணெயைச் சேர்த்து, காலை மாலை இரு வேளையும், மூன்று நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டால் சீதபேதி குணமாகும்.
- கல்யாண முருங்கை இலை சாற்றைக் காதில் விட, காதுவலி நீங்கும். பல் வலி இருக்கும் இடத்தில் இலைச்சாற்றை விட்டால் பல் வலிநீங்கும். கல்யாண முருங்கைக் கீரையை வாரத்துக்கு இரண்டு மூன்று முறை எடுத்துக்கொள்ளலாம்.